ரமளான் மாதம் நோன்பு நோற்பது ஒவ்வோர் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பு இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
இது இஸ்லாத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகும் பொருட்டு. உங்களுக்கு முன்பு (இறைநம்பிக்கையாளர்களாக) இருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்குர்ஆன் 2:183)
ஒரு பெண் தன் பருவ வயதை அடைந்து விட்டால் அவள் மீது நோன்பு கடமையாகிறது. சில பெண்கள் ஒன்பது வயதிலேயே பருவத்தை அடைந்து விடுகின்றனர். அப்போதிருந்தே அவள் மீது நோன்பு கடமையாகிறது. இதை சிலர் அறியாது இருக்கின்றனர். சில பெண்கள் நான் சிரியவள் தானே என்ற எண்ணத்தில் நோன்பை விட்டு விடுகின்றனர். அவளுடைய பெற்றோரும் அவளை நோன்பு நோற்குமாறு ஏவுவதில்லை. இவ்வாறு செய்வது இஸ்லாத்தின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றை விட்டும் அலட்சியமாக இருப்பதாகும். இதுபோன்ற
நிலை ஏற்படும்போது மாதவிடாய் ஆரம்பமான நாளிலிருந்து விடுபட்ட நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் கடந்துவிட்டாலும் கூட அவள் அதை செய்தே ஆகவேண்டும். நோன்பு களாசெய்வ துடன், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
யார் மீது நோன்பு கடமை :
ரமளான் மாதம் வந்துவிடுமானால் பருவமடைந்த, சீரிய சிந்தனையுள்ள, ஊரில் தங்கியிருக்கிற ஆண் – பெண் அனைவரின் மீதும் நோன்பு கடமையாகும். இந்த மாதத்தில் யாராவது நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிடலாம். ஆனால், அவற்றை மற்ற நாட்களில் நோற்றாக வேண்டும்.
”உங்களில் எவர் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கி இருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.” (அல்குர்ஆன் 2:185)
அல்லாஹ் கூறுகிறான்: ”(ரமளான் நாட்களில்) உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் நோன்பு நோற்கவேண்டும்.” (அல்குர்ஆன் 2:184)
ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்துவிட்ட நிலையில் அவர் வயது முதிர்ந்த நோன்பு நோற்க முடியாதவராக இருந்தால், அல்லது எப்போதுமே குணமாக முடியாத நிரந்தர நோயாளியாக இருந்தால் – ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அவர் நோன்பை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுப்பார். அந்தந்த பகுதியிலுள்ள உணவிலிருந்து ஒரு நபருக்கு தேவையான அளவு கொடுப்பார்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்: நோய், குணமாகாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், வயோதிகர்களுக்குமே இந்த சட்டமாகும். அவர்கள் நோன்பை ‘களா’ச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் அவ்வாறு நோன்பு நோற்பது அவர்களால் முடியாத, கஷ்டமான செயலாகும் என அல்லாஹ் கூறியுள்ளான்.
ரமளானில் பெண்கள் நோன்பை விடுவதற்கென சில சலுகைகள் உள்ளன. சில காரணங்களால் ரமளானில் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் அவர்கள் நோற்கவேண்டும்.