ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும்,
தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.
”துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், ”சோதனையின்போது சப்தத்தை உயர்துபவளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
”ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.” (நூல்: முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!””அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)