மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில்(தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்கவேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24 : 31)
பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தால் கூட அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களின் நிலை அவ்வாறன்று. அதனால் தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப்படியாக விதித்துள்ளான்.
ஆனால் நம் பெண்களோ மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக்கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளனர். இறையச்சத்தை விட, தனது மானத்தை விட இவ்வுலக அலங்காரத்தையும் அந்நியவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது. நமது பெண்கள் “தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத் ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். இது தான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம் இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம். ஆனாலும் அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய விஷயங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அந்நிய ஆண்களின் முன்னிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் ஆடை விடயத்தில் தலைகீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை.
இன்று நம் பெண்களை வீதிகளில் காணும் போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாத அளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றது. இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம்.
ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன பெஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage)மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும் சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை அறிய வேண்டாமா?
ஏன் இந்த ஆடைகளை ஒழுக்கமான முறையில், உடலமைப்பைக் காட்டாத முறையில், அலங்காரத்தை வெளிப்படுத்தாமல், தளர்த்தியாக அணிய முடியாது? இவ்வுலக அலங்காரமும், மோகமும், மற்றவர்களின் திருப்தியுமே எமக்கு அழகாக தோற்றமளிக்கின்றது. ஆனால் ஈருலகிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்ற அல்லாஹ்வின் திருப்தி மட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்கின்றது?
ஆடைக்குறைப்பினாலும், முறையாக அணிந்தும் இறுக்கமாக அணிவதாலும் ஏற்படும் விபரீதங்களை பெண்களாகிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் படைத்தவனாகிய அல்லாஹ் அதற்காக பாதுகாக்கும் கவசமாக ஆடையை வழங்கி அதற்கான வரையறைகளையும் வகுத்து நமக்கு அருள் புரிந்துள்ளான். கவர்ச்சி காட்டுவதை அறியாமைக்கால (ஜாஹிலியாக்கால) பண்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 33:33)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்டஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3971)
பெண்களின் ஆடை எவ்வாறு அமைதல் வேண்டும்?
பெண்களின் ஆடையானது இறுக்கமில்லாமல் அணிந்தும் அணியாதவாறு இல்லாமல் அதாவது மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியக் கூடியவாறு மெல்லியதாக இல்லாமல் அலங்காரங்களை வெளியே காட்டாத வகையிலும் இருத்தல் வேண்டும்.
ஆனால் கணவன் முன்நிலையில் மட்டும் எந்தவித வரையறையும் இன்றி மேற்கூறிய தடைகளின்றி ஆடையலங்காரங்களை அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் ஆடையானது ஹபாயாவாக, கறுப்பு நிற ஆடையாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. எந்த நிறத்திலும் ஆடை அணிய மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. இஸ்லாம் மார்க்கமானது பெண்களின் ஆடை அமைய வேண்டிய ஒழுங்கு முறைகளைத் தான் வரையறுத்து நிர்ணயித்துள்ளது.
அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : முஸ்லிம் 131
பெண்களுக்கான பாதுகாப்பு
இஸ்லாம் வழங்கியுள்ள இந்த ஆடை அமைப்பானது நிச்சயமாக பாதுகாப்பு மிக்கதாகும். அடுத்தவர் பார்வை பெண்கள் மீது விழுவதும், பெண்கள் தொந்தரவு செய்யப்படுவதும் இதனால் தடுக்கப்படுகின்றது. இஸ்லாம் வழங்கியுள்ள இந்த பாதுகாப்பு தான் பெண்களுக்கு சுதந்திரமானது. இதனை ஒழுங்காக கடைப்பிடிப்போமாயின் இதன் உண்மை நிலையை நிச்சயமாக உணரலாம்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.''அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்றஅன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 33 : 59)