Blogger Widgets

திருமணச் சட்டங்கள்

திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்

தனக்குப் பிடித்தக் கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய
விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெüப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புகாரி (5136)

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ர-)
நூல் : புகாரி (5138)

திருமணப் பொருத்தம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் போது ஒழுக்கத்தையும் மார்க்கப்பிடிப்பபையும் முதலில் கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதற்கடுத்து பெண்கள் கணவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. 
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). 
அல்குர்ஆன் (24 : 26)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5090)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலிலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலிலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2953)

பிடித்தவரிடத்தில்
நேரடியாக சம்மதம் கேட்கலாம்

மனதிற்குப் பிடித்த ஆணிடத்தில் ஒரு பெண் நேரடியாக என்னைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா? என்று கேட்பது குற்றமில்லை. 
நான் அனஸ் (ர-) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக் கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?'' எனக் கேட்டார்'' என்று கூறினார்கள்.

அப்போது அனஸ் (ர-) அவர்களுடைய புதல்வி, "என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!!'' என்று சொன்னார்.அனஸ் (ர-) அவர்கள், "அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் அல் புனானி (ரஹ்)
நூல் : புகாரி (5120)

மஹர் வாங்குதல்

குடும்ப வாழ்க்கையில் பெண்ணாகிறவள் கணவனுக்கு பணிவிடை செய்வது அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது குழந்தையை பெற்றெடுப்பது போன்ற பல பணிகளை செய்கிறாள். இதனால் பெண்ணே அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதை கவனத்தில் வைத்து இஸ்லாம் ஆண்கள் பெண்களுக்கு அவர்கள் கேட்கின்ற மஹர் என்ற மணக்கொடையை தர வேண்டும் என்று கூறுகிறது.

திருமணத்தின் போதே ஒரு பெரும் தொகையை மனைவி வாங்கிக்கொண்டால் பிற்காலத்தில் கணவனால் அவள் விடப்படும் போது அதை வைத்து தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இயலும். இதை பெரும்பாலான பெண்கள் உணராத காரணத்தினால் மஹர் தொகையை கணவனிடமிருந்து வாங்குவதில்லை. அப்படி வாங்கினாலும் கணவன் கொடுப்பது குறைவாக இருந்தாலும் பராவயில்லை என்று வாங்கிக்கொள்கிறார்கள். 
சமுதாயத்தில் நிலவும் வரதட்சனை கொடுமையின் காரணத்தினால் தான் பெண்கள் மஹர் விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள். பெண்களிடம் வரதட்சனைக் கேட்டு கசக்கிப்புலியும் கேடுகெட்ட மாப்பிள்ளைகள் அல்லாஹ்விற்கு பயந்து நடந்துகொள்ள வேண்டும். 
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
அல்குர்ஆன் (4 : 4)

அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக் கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பüப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை'' என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ("மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க் கொடு!'' என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், "என்னிடம் இல்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனி-ருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?'' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியா யங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  "உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர-)
நூல் : புகாரி (5029)

மனைவியின் பொருள் மனைவிக்கே உரியதாகும்

மனைவியிடத்தில் இருக்கும் செல்வம் கணவனுக்கு உரியது என்று அதிகமான மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மனைவியின் ஆபரணங்களை கணவன் கேட்கும் போது இவ்வாறு கேட்பதற்கு அவனுக்கு உரிமை உள்ளது என்று நினைத்துக் கொண்டு விருப்பமில்லாமலேயே அவனிடத்தில் கொடுத்து விடுகிறார்கள். 

இது தவறான நம்பிக்கை. தனக்குக் கிடைக்கின்ற பொருளை தன் வசத்தில் வைத்துக் கொள்வதற்கு பெண்ணுக்கு இஸ்லாத்தில் முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. தன் கணவனுக்கு தன் பொருளிலிருந்து எதையாவது தர வேண்டும் என்று அவள் விரும்பினால் கணவனுக்கு கொடுப்பதில் தவறில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் சொத்துக்களை தங்களுக்கு உரியதாகவே வைத்துக்கொண்டார்கள். 

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலிலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும்  அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலிலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்'  எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலிலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால்(ரலிலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் அவர்களின் மனைவி ஸைனப் (ரலி)
நூல் : புகாரி (1466)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!  
அல்குர்ஆன் (4 : 4)

மனப்பெண்ணிற்கு
கருகமணி மெட்டி அணிவிக்க வேண்டுமா?
மனப்பெண் கருகமணியை கட்ட வேண்டும் என்ற வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. இவ்வாறு செய்யுமாறு திருக்குர்ஆனும் கூறவில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் மனமகன் மனப்பெண்ணிற்கு மஹர் என்ற திருமணக்கொடையை கட்டாயம் தர வேண்டும். இரண்டு சாட்சிகள் அவசியம். பெண்ணின் பொருப்பாளரின் சம்மதம் அவசியம் வேண்டும். பெண்ணுடைய சம்மதமும் முக்கியம். இவைகள் தான் திருமணத்தின் நிபந்தனைகள்.
திருமணம் என்பது ஆண்கள் பெண்களிடத்தில் எடுக்கும் ஒரு வலிமையான ஒப்பந்தமாகும். 
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை (பெண்களாகிய) அவர்கள் எடுத்துள்ளார்கள். 
அல்குர்ஆன் (4 : 21)

கருகமணியை அழகிற்காக பெண்கள் அணிவதில்லை. 


அது கழுத்தில் இருந்தால் தான் கணவன் உயிருடன் இருப்பான். அது அறுந்துவிட்டால் கணவனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடும் என்ற மூடநம்பிக்கையில் அணியப்படுகிறது. எனவே தான் கருகமணி அறுந்துவிட்டால் கருகமணி அறுந்துவிட்டது என்று சொல்லாமல் கருகமணி பெருகிவிட்டது என்று கூறுவார்கள்.
இந்த மூடநம்பிக்கை தாலி என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களிடத்தில் தான் உள்ளது. மாற்றுமத்தவர்களைப் போன்று நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

(மற்றக்) கூட்டத்தார்களைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை. )
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
    
கருகமணியைப் போன்றே மெட்டியும் மூடநம்பிக்கையின் காரணமாக அணியப்படுகிறது. இவற்றை அழகு என்ற காரணத்திற்காக பெண்கள் அணிந்தால் தவறாகாது. ஆனால் சடங்கு சம்பரதாயம் என்ற காரணத்திற்காக மக்களுக்கு மத்தியில் இவை அணியப்பட்டுவருவதால் இந்தப் பொருட்களை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

மனைவியின் பொறுப்பு என்ன?

கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும் பிள்ளையை முறையாக வளர்ப்பதும் கணவனுக்குப் பிடித்தவாறு நடந்துகொள்வதும் மனைவியின் மீது கடமை. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாüயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) 
நூல் : புகாரி (5200)

கனவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் மனைவி அனுமதிக்கலாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5195)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகங்கüல் பயணம் செய்த (அரபுப்) பெண்கüலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்ட வர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5082)

அலங்கரித்துக்கொண்டு கணவனுக்கு முன்னால் வர வேண்டும்

கணவனுக்கு முன்னால் தன்னை அலங்கரித்துக் கொண்டு வர வேண்டும். கணவன் மனைவியை பார்க்கும் போது அவனுக்கு சந்தோஷமும் ஆசையும் ஏற்படவேண்டும். 

(தபூக் போரி-ருந்து திரும்பிக்கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், "நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெüயூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமை யாயிரு!)'' என்று கூறிவிட்டு, "புத்திசா-த்தனமாக நடந்து(குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசா-த்தனமாக நடந்துகொள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி (5245)

ஒரு ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளை காணும் போது அவனுக்கு அவள் சந்தோஷத்தை ஏற்படுத்துவாள். கட்டளையிடும் போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது அவன் (சொத்தைப்) பாதுகாப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (1417) 

கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5193)

கணவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வது மனைவியின் கடமை. நோன்பு வைத்திருக்கும் போது உடலுறவு கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே உபரியான நோன்புகளை கணவனின் அனுமதி இல்லாமல் வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5192)

தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக்கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : தல்க் பின் அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1080)
அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது
   
கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் அந்தரங்கமான விஷயங்களை மற்றவர்களிடத்தில் சொல்வது தவறு. ஆனால் சில பெண்கள் தன் கணவனின் அந்தங்கமான விஷயங்களை மற்ற பெண்களிடத்தில் கூறுகிறார்கள். சில ஆண்களும் இவ்வாறு மற்ற ஆண்களிடத்தில் தன் மனைவியின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். மோசமான இந்தச் செயலை விட்டும் தவிர்ந்துகொள்ள வேண்டும். 


ஒரு மனிதன் தன் மனைவியுடன் இணைகிறான். அவளும் அவனுடன் இணைகிறாள். பிறகு அவளுடைய இரகசியத்தை பரப்பிவிடுகிறான். இவன் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மோசமான அந்தஸ்த்து உள்ளவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்ள். 
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (2597)
மற்றப் பெண்களின் அந்தரங்கத்தைப் பற்றி
 
தன் கணவனிடத்தில் கூறுவதும் தவறு. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம்-அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம். 
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5240)

ணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

கணவன் மார்க்கத்திற்கு மாற்றம் இல்லாத எந்த ஒரு காரியத்தை கட்டளையிட்டாலும் அதற்கு மனைவி கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் "(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம்பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்'' என்று கூறினார்கள். அப்போது "இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?'' என்று கேட்கப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள், "கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் "உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை'' என்று பேசிவிடுவாள்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (29)

ஹை‚சைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்கு கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துகொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலேத் தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துகொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாகும். உனது நரகுமுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பவர் : ஹ‚ஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)
நூல் : அஹ்மத் (18233)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் இன்னொருவருக்கு சிரம்பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன். 
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல் : அஹ்மத் (20983)
கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக சொன்னால்...

மனைவி கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதே நேரத்தில் கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படக்கூடாது. இதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். 
அன்சாரிகüல் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகüன் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, "என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5205)

அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : புகாரி (7257)

கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்


கணவனுக்கும் அவனது உறவினர்களுக்கு பணிவிடை செய்வது பெண்கள் மீது கடமையில்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இதனால் கணவனின் உறவினர்களை இவர்கள் சரியாக கவனிப்பது கிடையாது. இது தவறாகும். 
ஒரு ஆண் ஒரு பெண்னை பல நன்மைகளை எதிர்பார்த்து திருமணம் செய்கிறான். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவள் பனிவிடை செய்யவேண்டும் என்பது அதில் ஒன்றாகும். முரண்டு பிடிக்காமல் முதியவர்களை மதித்து நடப்பதே இறைநம்பிக்கையுள்ள பெண்ணிற்கு அடையாளம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் ஜாபிரே உனக்கு மனைவி உண்டா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஏற்கனவே திருமணமானவளை மனந்தாயா அல்லது கண்ணிப்பெண்னை மனந்தாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவளைத் தான் மனந்தேன் என்று கூறினேன். நீ சிறிய (இளம்) பெண்னை திருமணம் செய்திருக்கக்கூடாதா? என்று கேட்டார்கள். நான் உங்களுடன் (போருக்கு சென்றிருந்த போது) என் தந்தை இன்னாளில் கொல்லப்பட்டுவிட்டார். அவர் (என் சகோதரிகளான) பல இளம் பெண்களை விட்டுச் சென்றுள்ளார். அவர்களைப் போன்ற ஒரு இளம் பெண்னையே (என் மனைவியாக ஆக்கி) அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் விரும்பவில்லை. எனவே (என் சகோதரிகளான) அந்த இளம்பெண்களுக்கு பேண் பார்த்துவிடவும் அவர்களின் சட்டை கிழிந்துவிட்டால் அதைத் தைத்துக்கொடுக்கவும் (பக்குவம் பெற்ற) ஏற்கனவே திருமணமான பெண்னை நான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினேன். நீ நினைப்பது சரிதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஹ்மத் (14332)

அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ர-) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ர-) அவர்களுடைய துணைவியார் (மணப் பெண்) உம்மு உசைத் (ர-) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள்.  உம்மு உசைத் (ர-) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ர-) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பüப்பாக ஊட்டினார்கள். 
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஃத் (ரலி)
நூல் : புகாரி (5182)

வெளியில் சென்றால் அனுமதி கேட்க வேண்டும்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கணவனிடம் அனுமதி கோர வேண்டும். பெண்கள் கணவனின் அனுமதி பெற்று வெளியில் செல்வது மார்க்கத்தில் உண்டு என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் மனைவியர் பள்üவாசலுக்குச் செல்ல உங்கüடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-)
நூல் : புகாரி (5238)

கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?

கணவன் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையை கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவனுக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும். 
முஆவியா (ரலிலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலிலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார்.  அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள்.  அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி) அவர்கள்
நூல் : புகாரி (2211)

கணவனின் பொருளை வீண்விரயம் செய்யாமல் நல்ல வழியில் செலவழித்தால் மனைவிக்கு நன்மை உண்டு. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை -வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 
நூல் : புகாரி (22110

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது. 
நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல்' (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (5209)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) 
நூல் : முஸ்லிம் (2606)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2610)

மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம். 

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (2542)

தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிûடாயாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாத வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது. 
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள். 
செய்ற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா?

நவீன கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களில் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது ஒன்றாகும். இது இரண்டு முறையில் செய்யப்படுகிறது. கணவனின் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் கருவிகள் மூலம் செலுத்தி கருத்தரிக்கச் செய்யுதல். இவ்வாறு செய்வதில் தவறில்லை. ஏனென்றால் மனைவி என்பவள் கணவனின் விளைநிலம் என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னுடைய நிலத்தில் தன் விதையை விதைப்பதற்கு கணவனுக்கு முழு அனுமதியுள்ளது. 

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங் களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
அல்குர்ஆன் (2 : 223)

ஆனால் கணவன் அல்லாத யாரோ ஒருவரது விந்தனுவை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தி கருத்தரிக்கச் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் தனக்கு உரிமையில்லாத நிலத்தில் விதையைத் தூவி பயிரிடுவதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதுபோல் தனக்கு உரிமையில்லாதவளிடம் தன் விந்தை செலுத்தி குழந்தையை உருவாக்குவதை இஸ்லாம் ஒத்துக்கொள்ளவில்லை. 

குழந்தைகளை பெற்றெடுப்பதால் சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதாலும் அழகு குறைந்தவிடுகிறது என்பதாலும் சில பெண்கள் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வாடகைப் பெண்களை அமர்த்துகிறார்கள். தங்கள் கணவனின் விந்தணுவை இப்பெண்களின் கருவரைக்குள் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள். இதுவும் செய்யக்கூடாத மானங்கெட்ட செயலாகும். குழந்தையை பெற்றெடுத்தவள் தான் குழந்தைக்குத் தாயாக முடியும் என்ற சாதாரண அறிவு இருந்தால் இதுபோன்ற இழிவுச் செயலை செய்யமாட்டார்கள். 
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.