Blogger Widgets

ஆண் பெண் ஹஜ் செய்யும் முறை


பெண்கள் ஹஜ் செய்யும் முறை என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததும், ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. தொழுகை, நோன்பு, ஜகாத்
போன்ற கடமைகளில் பெண்களுக்கென்று தனிச் சட்டம் இல்லை; அது போன்று ஹஜ்ஜிலும் பெண்களுக்கென தனிச் சட்டம் இல்லை. எனினும் அவர்களின் உடற்கூறு, இயற்கை அமைப்பைப் பொறுத்து சில தனிச் சட்டங்கள் உள்ளன.
பெண்களுக்கு மாதவிலக்கு, பிரசவத் தீட்டு போன்ற இயற்கை உபாதைகள் உள்ளன. இக்கால கட்டங்களில் அவர்கள் தொழக் கூடாது. அவர்கள் துப்புரவானதும் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழத் தேவையில்லை.
ரமளானில் நோன்பு நோற்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நோன்பு நோற்கக் கூடாது. ஆனால் இக்கால கட்டத்தில் எத்தனை நோன்பு விடுபட்டனவோ அவற்றை அவர்கள் துப்புரவானதும் திரும்ப நோற்றாக வேண்டும்.
இப்படிப் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து தொழுகை, நோன்பில் தனிச் சட்டங்கள் இருப்பது போன்றே ஹஜ், உம்ராவிலும் தனிச் சட்டங்கள் உள்ளன. அந்தத் தனிச் சட்டங்களைத் தொகுத்துத் தருவது ஹஜ் செய்யும் பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
குறிப்பாக மாதவிலக்கு, பிரசவத் தீட்டு ஆகியவை பெண்களுக்குரிய முக்கியமான பிரச்சனைகளாகும். இது போன்ற கால கட்டங்களில் தமத்துஃ, கிரான், இஃப்ராத் போன்ற ஹஜ் வகைகளில் எந்த முறை அவர்களுக்கு உதவியாகவும், வசதியாகவும் அமைகின்றது என்பதை விரிவாக எடுத்துக் கூறுகையில் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற வகையில் இந்தக் கட்டுரை பெண்களை மையமாக வைத்து ஆக்கம் கண்டிருக்கிறது.
ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனம் முஸ்லிம்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21
இந்த ஹதீஸ், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ்ஜைக் குறிப்பிடுகின்றது.
யார் மீது கடமை?
தொழுகை, நோன்பைப் போன்று எல்லோர் மீதும் ஹஜ் கடமையாகி விடுவதில்லை. அதற்கென்று ஒரு நிபந்தனை உண்டு. பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற மார்க்க வணக்கங்கள் கடமையாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பருவ வயதை அடைதல், புத்தி சுவாதீனமாக இருத்தல் ஆகிய நிபந்தனைகள் நிறைவேறினால் தான் இந்த வணக்கங்கள் கடமையாகும். ஆனால் ஹஜ் கடமையாவதற்கு இந்த நிபந்தனைகளுடன், மக்காவிற்குச் சென்று வர சக்தி பெற்றிருத்தல்’ என்ற நிபந்தனையும் சேர்கின்றது.
ஒருவர் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் அவர் மக்கா சென்று வருதற்குரிய பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வசதிகளைப் பெறாதவருக்கு ஹஜ் கடமையில்லை.
இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா?
ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர்.
ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.
அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
நாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம்.
முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
சென்று வர சக்தி பெற்ற மனிதர்கள் மீது கடமை என்று இந்த வசனம் பொதுவாகத் தான் கூறுகின்றது. மனிதர்கள் என்ற இந்த வார்த்தையில் பெண்களும் அடங்குகின்றனர். ஆனால் சென்று வர சக்தி பெற்ற ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா? என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது.
ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது. அதாவது ஒரு பெண் மஹ்ரமானவர் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் பெண்களுக்கு ஒரு வரையறையைக் கொடுத்து விடுகின்றது.
சக்தி பெற்றவர் மீது கடமை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு மஹ்ரம் அல்லது கணவன் துணை இருந்தால் தான் ஹஜ் செய்வதற்கு அவள் சக்தி பெறுகின்றாள் என்று இந்த சாரார் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
இதை வலியுறுத்த சில ஆதாரங்களையும் காட்டுகின்றனர்.
“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087
ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.
“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233
நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அல்லது அழகில்லாதவளா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா? இல்லையா?” என்றெல்லாம் விசாரிக்கவில்லை.
உன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.
இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.
இரண்டாவது சாராரின் ஆதாரங்கள்
பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. சென்று வர சக்தி பெறுதல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் பயணத்திற்குத் தேவையான பொருளாதாரம், வாகனம் என்று விளக்கம் கொடுத்து விட்டார்கள். (இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலமானதாக இல்லை. எனினும் இந்த வசனத்திலேயே அந்தக் கருத்து உள்ளது)
இது இரண்டாவது சாராரின் வாதமாகும்.
மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:
பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.
இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
வந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். “அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை” இது தான் நபி (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம்.
அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், “ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்” என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்’ என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?
மதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,
பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.
அதுதான், “ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்” என்பதாகும்.
கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்” என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)
எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.
இவ்வாறு இரண்டாவது சாரார், “ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்” என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.
புகாரியில் 3006வது ஹதீஸில், தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் அந்த நபித்தோழரிடம், “உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா?” என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்:
புகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள். எனவே இந்த ஹதீஸ் அதை மாற்றி விட்டது என்று பதில் கூறுகின்றனர்.
பெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.
உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.
நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5615, 5616)
இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.
இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.
இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டுவிதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.
ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.
எனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.
ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப் பட்ட பெண் தான்  இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.
இனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில் வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
1.
ஆண்கள்
இஹ்ராமிற்குப் பிறகு தலை திறந்திருக்க வேண்டும்
பெண்கள்
வழக்கம் போல் தலை மூடியிருக்க வேண்டும்.
2.
ஆண்கள்
தையல் ஆடை அணியக்கூடாது.
பெண்ககள்
வழக்கமான, தையல் உள்ள ஆடைகளை அணியலாம்.
3.ஆண்கள்
தவாஃபின் போது இடது புஜத்தை மூடி வலது புஜத்தைத் திறந்திருக்க வேண்டும்.
பெண்கள்
வழக்கம் போல் மூடியே இருக்க வேண்டும்.
4.
ஆண்கள்
தலை முடியை மழிக்க வேண்டும்.
பெண்கள
சிறிது கத்தரித்தால் போதும்.
இஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்று பெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது.
ஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவை முழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும்.
1. முகத்தை மூடக் கூடாது.
2. கைகளுக்கு உறை அணியக் கூடாது.
3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா – பயண தவாஃப் இல்லை.
இங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள் செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள் செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம். இப்போது ஹஜ்ஜின் முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம்.
இஹ்ராம் அணிதல்
இஹ்ராமுக்கு முன் குளித்தல்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
இஹ்ராம் பற்றிய சிறு விளக்கம்
இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.
(அல்குர்ஆன் 2:196)
பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703
2. நகங்களை வெட்டக் கூடாது.
“உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 3653, 3654
“குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.
3. நறுமணம் பூசக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா’ கூறியவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
“அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.
4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.
“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)
நூல்: முஸ்லிம் 2522, 2524
5. உடலுறவு கொள்ளக் கூடாது.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)
6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.
மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க ‘ரஃபத்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.
உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
7. வேட்டையாடுதல் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 5:94)
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:95)
உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)
இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.
பெண்கள் ஹஜ் செய்யும் முறையைப் பற்றி நாம் விளக்கினாலும் பிரித்தறிவதற்காக ஆண்களுக்கான தடைகளையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை
1. தலையை மறைக்கக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா’ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
“மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.
2. தையல் ஆடை அணியக் கூடாது.
“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852.
பெண்களுக்கு மட்டும் தடையானவை
“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1838
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.
இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.
தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை
இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.
எந்த வகையான ஹஜ் செய்வது?
ஹஜ் செய்வதில் மூன்று வகைகள் உள்ளன. 1. தமத்துஃ, 2. கிரான், 3. இஃப்ராத் ஆகியவையாகும். (இவற்றைப் பற்றி பின்னர் விளக்கப் படும்) இந்த வகைகளில் தமத்துஃ என்ற வகையே மிகவும் சிறந்ததாகும். இந்த தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்யும் ஒருவர், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட வேண்டும். அதன் பின்னர் துல்ஹஜ் பிறை 8ம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ்ஜின் வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ் செய்யும் மாதங்களில் உம்ரா செய்யக் கூடாது என்று அன்றைய அரபியர்கள் தவறான நம்பிக்கையில் இருந்தனர். இதை இஸ்லாம் முற்றிலும் மாற்றி விடுகின்றது.
“கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: முஸ்லிம் 2137, அஹ்மத் 2173
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீக்’ எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! உம்ரதுன் பீஹஜ்ஜதின்’ (ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 1534, 2337, 7343
எனவே முதலில் உம்ரா செய்ய வேண்டும்.
உம்ரா செய்யும் முறை
இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், “லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்” அல்லது “லப்பைக்க உம்ரத்தன்” என்று கூற வேண்டும். இந்த இடத்தில் சிலர், ”நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதன் பின்னர் தல்பியா கூற வேண்டும்.
தல்பியா கூறுதல்
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
இவ்வாறு மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும். ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.
தவாஃபுல் குதூம் அல்லது உம்ராவின் தவாஃப்
குதூம்’ என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம்’ என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் தவாஃப் அல்குதூம்’ செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
மகாமு இப்ராஹீமில் தொழுதல்
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)
ஷஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
தவாஃபுல் குதூம்’ எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸஃபா’ மர்வா’வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து “ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை” என்றும் விளங்கலாம்.
முடியைக் கத்தரித்தல்
“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகி விடும்.
உம்ராவைப் போன்று ஹஜ்ஜுக்கும் இஹ்ராம், கஅபாவைச் சுற்றுதல், ஸஃபா மர்வாவைச் சுற்றுதல் போன்ற காரியங்கள் மிக முக்கியமான வையாகும். அத்துடன் அரஃபாவில் தங்குதல், கல்லெறிதல் போன்ற வணக்கங்கள் அதிகமாகச் சேர்ந்து கொள்கின்றன. இவை இல்லாமல் ஹஜ் இல்லை.
உம்ராவில் நாம் செய்யும் தவாஃபிற்கு, தவாஃபுல் குதூம் என்று சொல்வது போன்று ஹஜ்ஜில் நாம் செய்யும் தவாஃபிற்கு தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ்ஸியாரா அல்லது ஹஜ்ஜுடைய தவாஃப் என்று பெயர்.
மக்காவுக்கு வந்ததும் நாம் செய்கின்ற தவாஃபும், ஹஜ்ஜின் போது நாம் செய்கின்ற தவாஃபும் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இந்தத் தவாஃபுகளை விட்டு விடக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
இப்போது ஹஜ்ஜின் மூன்று வகைகளைப் பார்ப்பதற்கு இதுதான் பொருத்தமான இடம்.
1. தமத்துஃ
இதுவரை சொன்னபடி உம்ரா செய்து விட்டால் இத்துடன் இஹ்ராமின் போது தடை செய்யப்பட்ட காரியங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டு விடுகின்றன. இனிமேல் துல்ஹஜ் பிறை 8ம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுகின்ற வரை இஹ்ராம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் நாம் சுகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சுகத்தை நாம் அனுபவிப்பதால் இந்த வகை ஹஜ்ஜுக்கு தமத்துஃ என்று பெயர். அதாவது சுகம் பெறுதல், அவகாசம் எடுத்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள்.
2. கிரான்
கிரான்’ என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். இஹ்ராம் எல்லையில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்’ என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.
ஒரே இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை.
தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.
குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு சென்றவர் இந்த வகை ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும். தமத்துஃ செய்யக் கூடாது.
3. இஃப்ராத்
இஃப்ராத்’ என்றால் தனித்துச் செய்தல்’ என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன்’ என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.
இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.
குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார். இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.
மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
தமத்துஃ செய்யும் படி உத்தரவு
எனினும் மேற்கண்ட இந்த மூன்று வகைகளில் நபி (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்யும்படியே உத்தரவிடுகின்றார்கள். எனவே தமத்துஃ ஹஜ் செய்வதே சிறந்ததாகும்.
நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்த போது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் தவாஃபையும் ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றி விட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து இதற்கு முன்னால் செய்ததை தமத்துஃ (உம்ரா)ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஃ ஆக ஆக்குவது?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான்
கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன். குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தால் அதை அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடுகின்ற வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1568
தவாஃபுக்கு முன் மாதவிலக்கு ஏற்படுதல்
உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிய பெண், தவாஃபுக்கு முன் மாதவிலக்காகி விட்டால் என்ன செய்வது? இது போன்ற நிலை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த தீர்வு:
“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 305, 1650
நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1556
இந்த ஹதீஸ்களின் படி ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸஃயீ செய்தல் ஆகிய இரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜின் வணக்கங்களை சிறு சிறு தலைப்பு வாரியாக மட்டும் இப்போது பார்த்து விட்டு வருவோம்.
எட்டாம் நாள்
1. எட்டாம் நாள் இஹ்ராம் கட்ட வேண்டும். மக்காவில் எந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். பின்னர் மினாவுக்குச் செல்ல வேண்டும். 9ம் நாள் காலை சூரியன் உதயமாகும் வரை அங்கு தங்குதல்.
ஒன்பதாம் நாள்
2. ஒன்பதாம் நாள் சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கிச் செல்லுதல். சூரியன் மறையும் வரை அங்கு பிரார்த்தனையில் ஈடுபடுதல்.
3. சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்குச் சென்று அங்கு ஃபஜ்ர் நேரம் வரை தங்குதல்.
4. ஃபஜ்ர் நேரமானதும் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அதிகாலை நேரம் நன்கு வெளுக்கும் வரை திக்ர், துஆக்களில் ஈடுபடுதல்.
பத்தாம் நாள்
5. சூரியன் உதயமானதும் மினாவுக்குத் திரும்புதல்.
6. ஜம்ரத்துல் அகபாவில் 7 கற்கள் எறிதல்.
கல்லெறிதலில் பெண்களுக்குச் சலுகை
முஸ்தலிஃபாவிலிருந்து சூரிய உதயத்திற்குப் பிறகு தான் மினாவுக்குச் செல்ல வேண்டும். இருப்பினும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முந்தியே செல்லலாம்.
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
நூல்: புகாரி 1679
கல்லெறிந்த பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடலாம். தாம்பத்தியத்தைத் தவிர மற்ற அனைத்தும் அனுமதியாகும்.
7. குர்பானி கொடுத்தல்.
8. தலை முடியைக் கத்தரித்தல். (ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல் சிறந்தது)
9. மக்காவுக்கு வந்து தவாஃபுல் இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்) செய்தல்.
தமத்துஃ முறைப்படி இஹ்ராம் கட்டியவர் கஅபாவில் தவாஃப் செய்து விட்டு ஸஃபா மர்வாவில் ஸஃயீ செய்ய வேண்டும்.
கிரான் முறைப்படி இஹ்ராம் கட்டியவர் உம்ரா தவாஃபின் போது ஏற்கனவே ஸஃபா மர்வாவில் ஸஃயீ செய்திருந்தால் இப்போது ஸஃயீ செய்யத் தேவையில்லை. ஏற்கனவே செய்யாவிட்டால் இப்போது ஸஃயீ செய்ய வேண்டும்.
10. பிறகு மினாவுக்குத் திரும்பி அங்கு இரவில் தங்க வேண்டும்.
பதினொன்றாம் நாள்
11. மூன்று ஜம்ராக்களில் கல்லெறிதல்
12. அன்று மாலை அதாவது 12ம் இரவில் மினாவில் தங்குதல்.
பனிரண்டாம் நாள்
13. முந்தைய நாள் எறிந்தது போன்று மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல்.
14. அன்றே கிளம்ப வேண்டும் எனில் சூரியன் மறைவுக்கு முன்னால் புறப்படுதல். பதிமூன்றாம் நாள் புறப்பட வேண்டுமெனில் இரவில் மினாவில் தங்குதல்.

பதிமூன்றாம் நாள்
15. ஏற்கனவே இரண்டு நாட்கள் எறிந்தது போன்று மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல்
16. மினாவிலிருந்து கிளம்பி தவாஃபுல் விதா – விடை பெறும் தவாஃப் செய்தல்.
ஹஜ்ஜும் மாதவிலக்கும்
தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃபும், தவாஃபுல் இஃபாளா எனும் ஹஜ்ஜுக்கான தவாஃபும் மிக முக்கியமான கடமைகள்; இவ்விரண்டும் இல்லாமல் உம்ராவும் ஹஜ்ஜும் நிறைவேறாது என்று பார்த்தோம்.
இவ்விரு தவாஃபுகளில் உம்ரா தவாஃபைத் தான் ஆயிஷா (ரலி) நிறைவேற்ற முடியாமல் ஆனது. அதற்காக அவர்கள் மிகப் பெரிய கவலைப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி)யை நோக்கி, தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற அனைத்து வணக்கங்களையும் செய்து கொள்’ என்று கூறினார்கள். அதன்படி ஆயிஷா (ரலி) ஹஜ்ஜின் காரியங்கள் அனைத்தையும் செய்யத் துவங்கினார்கள்.
ஸரிப் என்ற இடத்தில் ஆயிஷா (ரலி) மாதவிலக்கானார்கள். அரஃபா அன்று தூய்மையடைந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2124)
புறப்படும் நாளில், “உனது ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் உன்னுடைய (ஒரு) தவாஃப் விசாலமானதே” என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கிக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ்
நூல்: முஸ்லிம் 2123
“உனது ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் நீ ஸஃபா மர்வாவில் தவாஃப் செய்தது உனக்குப் போதுமானது” என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஜாஹித்
நூல்: முஸ்லிம் 2124
தனக்கு உம்ராவுக்கான தவாஃப் கிடைக்கவில்லையே என்று ஆயிஷா (ரலி) ஆதங்கமும் கவலையும் கொண்டார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், உம்ராவுக்கான தவாஃப் கிடைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். உனக்கு உம்ராவும் ஹஜ்ஜும் சேர்ந்தே கிடைத்து விட்டது’ என்று சொல்கின்றார்கள். அதனால் மாத விலக்கான பெண்கள் உம்ராவுக்கான தவாஃப் செய்ய முடியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஹஜ், உம்ரா இரண்டுமே சேர்த்துக் கிடைத்து விடுகின்றது.
இருப்பினும் ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஆயிஷா (ரலி) துப்புரவாகி கஅபாவை தவாஃப் (தவாஃபுல் இஃபாளா) செய்து, ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! நீ உனது ஹஜ், உம்ரா இரண்டிலிருந்தும் ஒருசேர ஹலாலாகி (வெளியாகி) விட்டாயே!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்கின்ற வரை கஅபாவை தவாஃப் செய்யாதது எனக்குள் ஓர் உறுத்தலாகவே உள்ளது” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (ஆயிஷா (ரலி)யின் சகோதரரை அழைத்து), “அப்துர் ரஹ்மானே! இவரை தன்யீமுக்கு அழைத்துச் சென்று உம்ராவை நிறைவேற்றச் செய்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2127)
எனவே ஒருவருக்கு உம்ராவுக்குரிய தவாஃப் விடுபட்டு விட்டால் அவர் தவாஃபுல் இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்) செய்தால் அவருக்கு உம்ரா, ஹஜ் ஆகிய இரண்டுமே சேர்த்துக் கிடைத்து விடும். எனினும் விரும்பினால் அவர் தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து ஓர் உம்ரா செய்து கொள்ளலாம்.
கிரான் ஹஜ்ஜும் மாதவிலக்கும்
ஒரு பெண் இஹ்ராம் கட்டும் போது, மக்கா சென்றதும் மாதவிலக்காகி விடுவோம் என்று தெரிந்தால் அவர் கிரானைத் தேர்வு செய்து கொள்வது நல்லது. காரணம் தமத்துஃ முறையில் உம்ரா செய்து, இஹ்ராம் களைந்து, பின்னர் ஹஜ் செய்தவற்குரிய சுதந்திரம் மற்றும் சலுகையை இவர் பெறப் போவதில்லை. இஹ்ராம் இல்லாமல் இருந்தும் இஹ்ராமில் உள்ளவரைப் போன்றே இருக்கின்றார். மேலும் உம்ராவுடைய தவாஃப், ஸஃயீ போன்றவற்றையும் இவர் செய்ய முடியாது.
எனவே அவர் இஹ்ராம் கட்டும் போதே கிரானைத் தேர்வு செய்து கொள்வது சிறந்ததாகும். அப்படியே தமத்துஃ முறையில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி வந்தாலும் அவர் கிரானுக்கு மாறிக் கொள்ளலாம்.
“இப்போது (தமத்துஃ முறையில் ஹஜ் செய்யலாம் என) நான் அறிந்து கொண்டதை முன் கூட்டியே அறிந்திருந்தால், பலிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன். நான் பலிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்காவிட்டால் (தமத்துஃ அடிப்படையில்) இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 1651)
இந்த ஹதீஸில் பலிப் பிராணியைக் கூட்டி வராமல் இருந்தால் நான் தமத்துஃ முறைக்கு மாறியிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, ஹஜ்ஜில் ஒரு முறையிலிருந்து இன்னொரு முறைக்கு மாறுவதற்குத் தடையில்லை என்பதை அறியலாம்.
எனவே மாதவிலக்கு ஏற்பட்ட வர்கள் தமத்துஃ முறையிலிருந்து கிரான் முறைக்கு மாறிக் கொள்ளலாம்.
தவாஃபுல் இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்)
தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் இந்தத் தவாஃபை நிறைவேற்றும் வரை அவர் காத்திருந்தே ஆக வேண்டும். ஏனெனில் அது தான் ஹஜ்ஜுக்குரிய தவாஃப் ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ்,
“பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்” (அல்குர்ஆன் 22:29) என்று கூறுகின்றான்.
எனவே ஹஜ்ஜுக்குரிய இந்தத் தவாஃபை நிறைவேற்றாமல் மக்காவை விட்டுக் கிளம்ப முடியாது.
சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, “நம்மை – நமது பயணத்தை – அவர் தடுத்து விட்டாரா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். “தவாஃபுல் இஃபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது” என்று நான் கூறினேன். அதற்கவர்கள், “அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1733, 328, 1757, 1772, 4401, 5329, 6157
தவாஃபுல் விதா
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும்.
விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.
மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2350, 2351
தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம்.
இந்தத் தவாஃபிலிருந்து மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் விதிவிலக்கு பெறுகின்றனர்.
தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகு ஸஃபிய்யா பின்த் ஹுயய் மாதவிலக்காகி விட்டார். அவரது மாதவிலக்கு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், “அவர் நம்முடைய பயணத்தைத் தடுத்து விட்டாரா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தவாஃபுல் இஃபாளாவுக்குரிய தவாஃப் செய்த பின்னர் தான் மாத விலக்கானார்” என்று சொன்னேன். “அப்படியானால் அவர் (பயண தவாஃப் செய்யாமல்) கிளம்புவாராக!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 4401, முஸ்லிம் 2353)
இந்த ஹதீஸிலிருந்து ஒரு பெண் தவாஃபுல் இஃபாளாவை முடித்த பின் மாதவிலக்காகி விட்டால் பயண தவாஃபுக்காக அவர் காத்திருக்கத் தேவையில்லை. உடனே கிளம்பி விடலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
மாதவிலக்கைத் தடுக்க மாத்திரை சாப்பிடுதல்
அறிவியல் வளர்ச்சி கண்டுள்ள இந்தக் காலத்தில் இன்று ஹஜ் பிரயாணத்திலும் நோன்பிலும் மாதவிலக்கினால் தங்களுக்கு ஏற்படும் இந்தத் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவதற்காக, மாதவிலக்கைத் தடுக்கும் மாத்திரை சாப்பிடலாமா? என்று ஒரு கேள்வி இங்கு வருகின்றது. சவூதி ஆலிம்கள் இவ்வாறு மாத்திரை சாப்பிடலாம் என்று மார்க்கத் தீர்ப்பும் அளித்திருக்கின்றனர்.
மார்க்கத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அதற்கு மாற்றுப் பரிகாரம் என்ன? என்பது மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு நாம் ஒரு மாற்று வழியைக் கொடுப்பது எப்படி நியாயமாகும்? மார்க்கப்படி சரியாகும்? இந்தத் தீர்ப்புக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன ஆதாரம்? என்றெல்லாம் இந்தத் தீர்ப்பில் கூறப்படவில்லை.
இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30) என்று அல்லாஹ் கூறும் இயற்கை அமைப்பை எதிர்த்து நிற்பதும், தேவையில்லாத நோயை விலைக்கு வாங்குவதும் ஆகும். ஒரு நோய்க்கு ஆண்டி பயாடிக் எனும் நோய் எதிர்ப்பு மாத்திரை சாப்பிடும் போதே அதனால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன எனும் போது, சுகமான, நல்ல ஆரோக்கியமான ஒரு பெண் இது போன்ற மருந்துகளைச் சாப்பிட்டு உடல் நலக் கேட்டை வரவழைக்கலாமா? நோயைத் தேடிச் சம்பாதிக்கலாமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மூன்று வணக்க முறைகள்
இங்கு தான் ஹஜ்ஜின் மூன்று வணக்க முறைகளில் உள்ள நன்மையை எண்ணிப் பார்க்க முடிகின்றது. இந்த வணக்க முறைகளில் தமத்துஃ தான் சிறந்தது.
பிறை 8க்கு மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் முந்தி வந்தால் தான் அவருக்கு தமத்துஃ உடைய சுகங்களும், சலுகைகளும் கிடைக்கும். உம்ராவும் ஹஜ்ஜும் கிடைக்கும். கிரானில் கிடைக்கும் நன்மைகள்
ஒருவர் லண்டனில் இருக்கிறார்; அவருக்கு விடுமுறை 15 நாட்கள் என்று வைத்துக் கொள்வோம். துல்ஹஜ் பிறை 6ல் லீவு கிடைக்கிறது என்றால் அவர் விமானத்தில் வந்தாலும் பிறை 8க்கு முந்தி வந்து சேர முடியாது.
இப்படித் தாமதமாக வரக் கூடியவருக்கு உம்ராவும் சேர்த்துக் கிடைக்க வேண்டுமானால் அவருக்குக் கிரான் தான் சிறந்ததாகும்.
இது மாதிரித் தான் ஒரு பெண் புறப்படும் போது, தனக்கு எப்போது மாதவிலக்கு ஏற்படும்? என்பது அவருக்குத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர் கிரானையே தேர்வு செய்து கொள்வது அவருக்கு மிகப் பெரிய வசதியாக அமையும்.
எதிர்பாராத விதமாக உம்ராவின் தவாஃபுக்கு முந்தியே மாதவிலக்கு ஏற்பட்டு விட்டாலும் அவர் கிரானுக்கு மாறிக் கொள்வது அவருக்கு வசதியாக இருக்கும்.
இஃப்ராதில் கிடைக்கும் நன்மை
இது போன்று ஒருவருக்கு ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவும் ஹஜ்ஜும் சேர்த்துச் செய்தால் குர்பானி கொடுக்க வசதியில்லை என்று வைத்துக் கொள்வோம். தமத்துஃ, கிரான் இந்த இரண்டில் எந்த வகையைச் செய்தாலும் அவர் குர்பானி கொடுத்தாக வேண்டும். குர்பானி கொடுக்காத பட்சத்தில் நோன்பு நோற்றாக வேண்டும். அவரால் நோன்பு வைக்கவும் இயலாது. இது போன்ற தருணத்தில் இப்ராத் என்ற முறை அவருக்குக் கைகொடுக்கின்றது.
இவ்வாறு ஹஜ்ஜின் வணக்க முறைகளில் மாற்று ஏற்பாடு இருக்கும் போது மாத்திரைகளைக் கொண்டு பரிகாரம் தேடுவது, அல்லாஹ் அமைத்த இயற்கை அமைப்புகளுக்கு எதிரான ஒரு சவாலாகும்.
எனவே ஹஜ்ஜில் உள்ள இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து பெண்கள் தங்கள் ஹஜ் பயணத்தைச் சரியான பயணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
மதீனா ஸியாரத்
பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு வணக்கம் கிடையாது என்பதைப் பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை.
மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் ஓரளவு நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.
“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996
இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.
ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் ஒருவர் மதீனாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்பவர்களின் குறிக்கோள் ஸியாரத்தாக இருக்கக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் ஒன்று அங்கே உள்ளது; பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது; அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.
சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஸியாரத் செய்யலாம்.
மறுபடியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஸியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் மதீனா வந்த விட்டதால் வந்த இடத்தில் ஸியாரத்தையும் செய்கிறோம். ஸியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஸியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
இவ்வாறு ஸியாரத் செய்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1244
இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் லஃனதுக்குரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸஜ்தாச் செய்வது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும்.
“எனது கப்ரைத் திருவிழா நடக்கும் இடமாக – திருநாளாக – ஆக்காதீர்கள்” என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவிக்கக் கூடாது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஸியாரத் செய்ய வேண்டும்.

Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.