Blogger Widgets

உதிரப்போக்கு


மாதவிடாய் நாட்கள் அல்லாத மற்ற நாட்களில்
பெண்களுக்கு வெளியாகும் உதிரப்போக்கை சாதாரன மான இரத்தம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதவிடாய் இரத்தமும், இந்த இரத்தமும் ஒன்றுபோல் காணப்படுவதால் இரண்டயையும் பிரித்து அறியும் விஷயத்தில் சில சிரமங்கள் உள்ளன.
உதிரப்போக்கு தொடர்ச்சியாக இருந்தால் மாத விடாய் இரத்தம் எது, சாதாரனமான இரத்தம் எது, எந்த இரத்தம் வருவதால் தொழுகையை விட வேண்டும் என்பதையெல்லாம் தெரிவது கடமையாகும். பெண் களுக்கு உதிரப்போக்கு மூன்று நிலைகளில் உள்ளது.
1. ஒரு பெண்ணுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்படுவ தற்கு முன்பு ஏற்கனவே மாதத்தின் ஆரம்பத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ, ஐந்து, எட்டு, அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் மாதவிடாய் ஏற்படும் வழக்கமுள்ளவளாக இருப்பாள். இந்நாட்கள் தான் அவளுடைய மாதவிடாய் நாட்கள் என்பதை அறிந்து கொள்வாள். அந்நாட்களில் அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அவள் குளித்துத் தூய்மையாகி தொழுகை யைத் தொடரவேண்டும். அதற்குமேல் தொடரும் உதிரப்போக்கை சாதாரனமான இரத்தம் எனக் கருதவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ”உன்னுடைய மாதவிடாய் நாட்களின் அளவு நீ தொழாமல் இருந்துகொள்! அதன் பின்னர் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடர்ந்து கொள்!” என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
2. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தெரியாது இருக்கும்போது, இரத்தத்தின் நிறம், வாடை ஆகியவற்றை வைத்து உதிரப்போக்கு எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது கருப்பு நிறமாகவோ, நாற்றமுடையதாகவோ இருக்குமானால் மாதவிடாய் இரத்தம் என கணிக்கப்படும். மாதவிடாய் இரத்ததைப் பொறுத்த வரையில் அது சிகப்பு நிறமாகவும் இருக்கும். இதை வைத்து ஒரு பெண் தனக்கு ஏற்பட்டுள்ளது மாதவிடாய் இரத்தம்தான் என்பதை அறிந்துகொண்டு அந்நாட்களில் தொழுகை, நோன்பை விட்டு விட வேண்டும். அவள் எதை மாதவிடாய் இரத்தம் எனத் தீர்மானிக்கிறாளோ அந்நாள் முடிந்ததும் குளித்து
விட்டு தொழுகை மற்றும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸாகும்.
மாதவிடாய் அறியப்படும் விதத்தில் கறுப்புநிற முடையதாக இருந்தால் தொழுகையை விட்டுவிடு, வேறு நிறத்தில் இருந்தால் நீ உளு செய்து தொழுது கொள். (அபூ தாவூது, நஸயீ)
3. மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்ற வழக்கம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுமானால், ஒரு மாதத்தில் அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும் நாட்களாக ஆறு அல்லது ஏழு நாட்களை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அதுதான் அதிகமான பெண் களின் மாதவிடாய் நாட்களாகும்.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”அது ஷைத்தானால் ஏற்படும் தீட்டாகும். நீ ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! மாதத்தில் 24 அல்லது 23 நாட்கள் தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்! அது உனக்கு போது மானதாகும். இவ்வாறே மற்ற பெண்களைப் போன்று நீ மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்!ம் என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, நஸயீ, திர்மதி, இப்னுமாஜா, அஹ்மது)
சுருங்கக் கூறினால், மாதவிடாய் இத்தனை நாட்கள் தான் என பழக்கப்பட்டவள் அந்நாட்களை மட்டுமே மாதவிடாய் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இரத்ததையும் வேறுபடுத்தி அறியக்கூடியவள் அதன்படியே செயல்படவேண்டும். இந்த இரண்டு நிலையிலும் இல்லாத ஒருவள், ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணின் விஷயத்தில் வந்துள்ள மேற்கண்ட மூன்று நபிமொழிகளையும் பின்பற்றியவளாகக் கருதப்படுவாள்.
ஷைகுல்இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார். உதிரப்போக்குள்ள பெண்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் ஆறு:
1. வழக்கம்: வழக்கமாகக் கடைபிடித்து வரும் ஒன்று உறுதியானதாகும். இங்கு மாதவிடாய் தான் அடிப் படையே தவிர மற்றவை அல்ல.
2. பிரித்தறிதல்: கருப்பான கட்டியான துர்நாற்றமுள்ள இரத்தம் மாதவிடாயாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் சிகப்பு நிற மாதவிடாய் இரத்தத்தை பிரித்தறிய முடியும்.
3. அதிகமான பெண்களின் வழக்கத்தை கவனித்தல்: ஒரு தனிநபர் பொதுவாக அதிக மக்களின் வழக்கத்தைக் கடைபிடிப்பதுதான் அடிப்படை.
இந்த மூன்று அடிப்படைகளுக்கும் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டு மற்ற அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.
”இது விஷயத்தில் ஹதீஸில் வந்துள்ள அடை யாளங்களை வைத்து கவனிப்பதுதான் சரியானதாகும், மற்றவற்றை விட்டுவிட வேண்டியதுதான் என ‘நிஹாயா” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதிரப்போக்குடைய பெண் அவள் சுத்தமானவள் என்ற முடிவின் படி அவள் கடைபிடிக்க வேண்டியவை.
1. முன்பு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் மாதவிடாய் முடிந்ததும் குளிப்பது அவள்மீது கடமையாகும்.
2. ஒவ்வொரு தொழுகையின் போதும் இரத்தம் வெளியாகி அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தம் வரும் துவாரத்தை பஞ்சு போன்ற பொருளால் அடைத்து அது விழுந்து விடாதபடி கட்டி வைக்கவேண்டும். பின்னர் தொழுகையின் நேரம் வந்ததும் உளூசெய்து தொழவேண்டும்.
உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)
உதிரப்போக்குடைய பெண்ணிடம், ”பஞ்சை அந்த இடத்தில் வைத்துக் கட்டிக்கொள்!” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதற்கென்றே தற்போது மருத்துவமுறையில் செய்யப்பட்ட பாதுகாப்பான பஞ்சுகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.