Blogger Widgets

ஹிஜாப் அணிதல்

பெண்கள் முகத்தையும் மணிகட்டு வரை இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தவிர மற்ற
அனைத்து உறுப்புக்களையும் அண்ணிய ஆடவரிடமிருந்து பெண்கள் அவசியம் மறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் தைக்கப்பட்டிருக்கலாம். இதற்கு அரபியில் ஹிஜாப் என்று சொல்லப்படுகிறது. நமது வழக்கில் பர்தா என்றும் புர்கா என்று கூறப்படுகிறது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன: (33 : 59)

திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் "பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.
இங்கே "ஜீனத்' என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, "மேக்கப்' பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்லி-ல் அடங்கும்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "ஜீனத்' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை. 
சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது. 

பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். 
அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3971)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.