Blogger Widgets

ஹிஜாப்


எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முக்காடுகளை கொண்டு அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல் குரான் 24:31)


பொது இடங்களில் பெண்கள் தனது பார்வையைத் தாழ்த்தி கொள்ளுமாறு அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான், நாம் இதை சரியாக கடைபிடிக்கிறோமா?நம்மில் பெரும்பாலான பெண்கள் இதை சரியாக கடைபிடிப்பதே இல்லை. தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்றால் அலங்காரத்தில் தெரிவது என்பது முகம், முன்கைகள் மட்டும்தான் மற்றவற்றை நாம் ஆடையால் மறைத்துவிட வேண்டும் தவிர முக்காடுகளை மார்பின் மீது போட்டுக் கொள்ளட்டும் என அல்லாஹ்வே சொல்கிறான். எனவே நாம் தலையை முக்காடிட்டு மறைக்க வேண்டும். நமது இஸ்லாமிய பெண்கள் வெளிநாட்டிற்கு வந்து விட்டால் நம்மை யார் கேட்பது என்பது போல் தலையை மறைக்காமலும் ஆடைகளை சரியான விதத்தில் அணியாமலும் நம்மில் எத்தனை பெண்கள் பொது இடங்களில் உலா வருகிறோம்? நம் பெற்றோர்கள், கணவன்மார்கள், மற்றும் பிள்ளைகள் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க மாட்டார்கள் அனல் நம்மை படைத்த அல்லாஹ் கேட்பான் என்று என்றாவது அஞ்சினோமா? நாம் எங்கே இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீன் நம்மை பார்ப்பான், பார்க்கிறான் என்ற எண்ணம் உள்ளதா? என நம்மை நாமே சுய பரிசோதனை செய்தால்தான் தெரியும். எனவே நாம் ஆடைகள் இறுக்கம் இல்லாமலும் முகம் முன்கைகள் தவிர மற்ற பாகங்களை மறைத்தாலே போதுமானது. அது பர்தா போட்டால்தான் முடியும் என்பதில்லை, ஆடைகள் உடல் உறுப்புகள் தெரியதவாறும் முழுவதுமாக மூடப்பட்டும் கிடைக்கிறது. நாம் அதை போட்டுகொண்டாலே போதுமானது.

மேலும் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)


மேலும் ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காக தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)



சில பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டுக் கொள்வதும் ஹிஜாப் என்று எண்ணுகின்றனர்.இதுவும் முற்றிலும் தவறாகும்.ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையும் இறுக்கமான ஆடைகளையும் நமக்கு இஸ்லாம் தடுத்திருக்கிறது.ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள். 



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஹாரி 5885


‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)



ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா? அல்லது மார்க்கத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஏற்ற ஆடையை பெண்களும் பெண்களுக்கு ஏற்ற ஆடையை ஆண்களும் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா? அணியும் ஆடை என்று பொருள் கொள்வதை விட அணியத்தக்க ஆடை என்று பொருள் கொள்வது தான் பொருத்தமானது. இறுக்கமான பேண்ட்களாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. தொய்வானதாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்ற உடை தான்.

இந்த நபிமொழிகளைப் படித்த பின்பாவது மெல்லிய, இறுக்கமான ஆடை அணியக் கூடிய எமது சகோதரிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.எனவே இஸ்லாம் கூறும் இந்த இனிய ஹிஜாப் முறையை நடைமுறைப்படுத்தி இந்த உலக தீமைகளிலிருந்தும் அந்த கடுமையான நரக நெருப்பிலிருந்தும் நம்மை காத்துக் கொள்வோமாக!
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.