Blogger Widgets

ஜீவனாம்சம்

விவாகரத்துக்குப் பின் மவைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதைவிடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.

பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும். திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது. 
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
அல்குர்ஆன் (2 : 241)

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிததாகும்.
ஆயினும் முஸ்-லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே 2:241 வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.
இதை "இத்தா காலத்தில்' என்று எளிதாகச் சொல்-லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் "அழகிய முறையில்' "நியாயமான முறையில்' என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.
அல்குர்ஆன் (2 : 236)

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
திருக்குர்ஆன் 65:6 வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. 

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:241) கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது. 
குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்?
கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய்தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பதுதான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
 
ஒரு பெண்மணி '' அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறுதான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள்தான் அவனுக்கு  குடிபானமாகும். என்னுடைய மடிதான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனை பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்.'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினார். நபியவர்கள் '' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)
நூல் : ஹாகிம் பாகம் : 2 பக்கம் 225 

2. குழந்தை பாலருந்தும் பருவத்தைக் கடந்து விட்டால் குழந்தைக்கு, தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் வழங்குகிறது. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தை தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை ) இருந்தது. அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னுடைய மகள்'' என்றாள் . ராபிஃவு (ரலி) அவர்கள் ''என்னுடைய மகள்'' என்றார். நபி(ஸல்) அவரை ''ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ''நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது.  நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார் 
அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)  
நூல் : அபூதாவூத் (1916) 

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப்பருவத்தை கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்  
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி)
நூல் : திர்மிதி (1277)

இந்த ஹதீஸில் வந்துள்ள ''சிறுவன்'' என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் ''குலாம்'' என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தை பருவம் முதல், பருவ வயதை  அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம் கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொருத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம்தான் அது ஒப்படைக்கப்படும்.

ஆனால் மேற்கூறப்பட்ட இரண்டு நிலைகளும் விவாகரத்துச் செய்யபட்ட குழந்தையின் தாய் மறுமணம் செய்யாமலிருக்கும் வரைதான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்துவிடும். இதனை 
'' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம். 
தாய் மறுமணம் முடித்துவிட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்துவிடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்கவிடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தாய் தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திப்பதற்கு முழு உரிமையிருக்கிறது.

மேலும் குழந்ததைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்த அதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.
அல் குர்ஆன் (2: 233)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.