Blogger Widgets

நிக்காஹ் (திருமணம்)


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
“இளைஞர்களே!
உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அபூஹ¤ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“நான்கு வியங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியின் கருத்தாவது: பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள், சிலர் குலச் சிறப்பை கவனிக்கின்றார்கள், வேறு சிலர் பெண்ணிண் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள், இன்னும் சிலரோ மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை “ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமுமேயாகும். இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று.”
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
மார்க்கப்பற்று கொண்ட கறுப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப்பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.”(அல்முன்தகா)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்:
“எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)
விளக்கம் :
நபி صلى الله عليه وسلم அவர்களுடைய கருத்து இதுதான்: மண விவகாரத்தில் பார்க்க வேண்டிய தகுதி மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமே ஆகும். இவற்றைப் பார்த்திடாமல் சொத்து சுகங்களையும் குலச்சிறப்பையும் மட்டுமே பார்த்தால் முஸ்லிம் சமூக அமைப்பின் அதனால் பெரும் தீமை விளையும். எவருடைய பார்வையில் மார்க்கம் இவ்வளவு தாழ்ந்து போய் சொத்து சுகம் மட்டுமே கவனிக்கத் தகுந்ததாகவும், மதிப்புக்குரியதாகவும் விளங்குகிறதோ அத்தகைய உலகாதயவாதிகளிடம் மார்க்கம் எனும் தோட்டத்தை – தியாக நீரைப் பாய்ச்சி செழிக்கச் செய்திட வேண்டும் எனும் உணர்வு எங்கே பிறக்கப்போகிறது? இத்தகைய நிலையைத்தான் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சோதனை
(குழப்பம்) என்றும் தீமை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:
நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம் தேடி ஒப்படைத்துவிடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ (நேர்வழியைத் தேடி வருபவர்க்கே அல்லாஹ் அதனை அளிக்கின்றான்) அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச் செய்து விடுகின்றானோ (எவன் வழிதவற விரும்புகின்றானோ அவனையே அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான்) அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.
பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். ஸப்ளான் ஸவ்ரி (ரஹ்) அவர்களின் விளக்கப்படி அந்த மூன்று வசனங்களாவன:
1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)
2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)
3. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிக் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்துவிடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71)
விளக்கம் :
இது திருமணத்தின் போது ஓதப்படும் ‘குத்பா’ ஆகும். இங்கு அதனைக் கொண்டு வருவதன் நோக்கம் இதுதான் : திருமணம் என்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக, இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, “நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாகவும், உற்ற துணைவர்களாகவும் விளங்குவோம்” என்று முடிவாகின்ற பொறுப்பு வாய்ந்த ஓர் ஒப்பந்தமாகும். மேலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்யும் பொழுது படைத்த இறைவனும், படைப்பினங்களான மக்களும் சாட்சிகளாக்கப்படுகின்றனர். திருமண உரையில் பெரும்பாலும் ஓதப்படும் இந்த வசனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கணவன் அல்லது மனைவியின் தரப்பிலிருந்து கோளாறு ஏதும் உருவாக்கப்பட்டு, அதனை சரிவரச் செப்பனிடாவிட்டால், அந்தக் கோளாறை உருவாக்கியவனின் மீது இறைவனின் சினம் சீறிப்பாய்ந்து அவனை நரகத்திற்குரியவனாக ஆக்கிவிடும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. திருமறையின் மூன்று இடங்களில் வரும் இந்த வசனங்களில் இறைநம்பிக்கையாளர்களை நோக்கி – இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.