Blogger Widgets

பிறருக்காக ஹஜ் செய்யலாமா?


ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள்
அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.
இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.

ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )
பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ… என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் – நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது. (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.