Blogger Widgets

விவாகரத்து (தலாக்)

மனைவியை விட்டுப் பிரிவதற்கு விரும்பும் கணவன் உன்னை விவாகரத்துச் செய்கிறேன் என்று மனைவியிடம் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கு அரபுமொழியில் தலாக் என்று சொல்லப்படும். இவ்வாறு விவாகரத்துச் செய்திட இஸ்லாத்தில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன அடியோடு திருமண உறவு முடிந்துவிடும் என்று கருதிவிடக்கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் புதிய திருமணம் செய்யாமலேயே மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்துகொள்ளலாம்.

இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கிவிடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம். இதற்கு எந்தத் தடையும் மார்க்கத்தில் இல்லை.

இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு குறிப்பிட்டது போல் மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மனைவியுடன் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம். இந்தக் காலம் கடந்து முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் இவர்கள் புதிய திருமணத்தை செய்துகொண்டு சேர்ந்து வாழலாம். 
மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாமல் போனால் மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்யலாம். ஆனால் இது தான் இறுதி வாய்ப்பாகும். மூன்றாவது முறை விவாகரத்துச் செய்துவிட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது.

என்றாலும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் வேறொரு கணவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்தால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் அவளை மறுபடியும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ வழியில்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறினாலோ அல்லது மூன்னூறு தலாக் என்று கூறினாலும் ஒரு விவாகரத்துத் தான் நிகழ்ந்துள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நேரத்தில் மூன்று தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் இரண்டு வருடத்திலும் மூன்று முறை தலாக் சொல்வது ஒரு தலாக்காகவே (கருதப்பட்டது.)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2689)

ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்டது தவறான நடைமுறையாகும்.
இரண்டு சாட்சிகள்

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்!
அல்குர்ஆன் (65 : 2)

இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்வதற்கான மற்றொரு நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. 
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.